புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் வெளியான இறுதி தீர்மானம்
சர்ச்சையான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
கடந்த மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டு பணியை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்ததை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட குழுவினால், பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.
மதிப்பீடு செய்யும் பணி
இதனையடுத்து, பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனித்தனியாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியாகியிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கமைய பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |