அரசாங்க நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்களை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை
அரசாங்க நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்காலத்தில் டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டின் ஒரு கட்டமாக அரசாங்க நிறுவனங்களுக்கு இடையில் இது தொடர்பான பரிவர்த்தனை நடவடிக்கையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகாமை துறை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய அத்திட்டத்திற்கு'Govpay' என்று பெயரிடப்பட்டிருந்தது.
கொடுக்கல் வாங்கல்கள்
இதன்படி தற்போது சுமார் 16 அரச நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வங்கிகள் இடையே குறித்த அப்ளிகேஷன் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் குறித்த செயற்திட்டத்தை புதிய அரசாங்கத்தின் செயற்திட்டமாக காட்டும் வகையில் எதிர்வரும் 07ஆம் திகதி அதற்கான அங்குரார்ப்பண நிகழ்வொன்றை அரசாங்கம் நடத்தவுள்ளது. இந்தநிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும், பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.