அரச ஊழியர்களுக்கான 25000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் அறிவிப்பு
அரசாங்க ஊழியர்களுக்கு 25000 ரூபா வாழ்க்கை செலவு கொடுப்பனவு வழங்கும் முடிவு தேர்தலுக்கான வாக்குறுதியோ வெறும் ஜனரஞ்சக வார்த்தையோ அல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21.08.2024) உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்காலத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது தேர்தல் வாக்குறுதியா என்றும் அவர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
நாம் 2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 13 இலட்சத்து 80 ஆயிரம் அரசாங்க ஊழியர்களுக்கும் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கினோம். ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளையும் அதிகரித்தோம்.
அரசாங்கத்தின் திட்டங்கள்
அவர்களுக்கு மேலும் 3000 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டங்கள் மூலமான நடவடிக்கைகள். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை மேற்கொண்டார்.
நாட்டு மக்களின் வாழ்வாதார நெருக்கடியை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம். வரிச்சுமையும் காணப்படுவதால் வரிகளை குறைக்க வேண்டியுள்ளது. முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனை மேற்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |