வேலைநிறுத்தத்தை தொடரவுள்ள அரசாங்க வைத்தியர்கள் : வெளியான அறிவித்தல்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளைய தினம்(06) வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இன்றைய தினம் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தத்தை கைவிட்ட போதிலும், நாளைய தினம் திட்டமிட்ட அடையாள வேலைநிறுத்தத்தை தொடர சுகாதார வல்லுனர்களின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் ஊடாக சுகாதாரத் துறை கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையால் தமது தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்குமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுகாதார நிபுணர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
24மணி நேர வேலைநிறுத்தம்
அவர்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கத் தவறியதால், சுகாதார வல்லுநர்களின் தொழிற்சங்கங்கள் நாளை 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
அதன்படி, துணை மருத்துவ சேவைகள், மருத்துவ ஆய்வகங்கள், தொடர்புடைய மருத்துவ சேவைகள், கதிரியக்கவியல், மருத்துவப் பயிற்சியாளர்கள், குடும்ப சுகாதார சேவைகள், பார்வை மருத்துவர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுநர்கள், பல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் உட்பட சுகாதார வல்லுநர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |