இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளர் நியமனம்
இலங்கை தழிழரசுக்கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்(MA.Sumanthiran) நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு(Batticaloa) களுவாஞ்சிகுடியில் நேற்று(16) நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை அந்த பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
உடனடித்தீர்மானம்
சத்தியலிங்கத்துக்கு அடுத்துக் கட்சியில் சிரேஷ்ட துணைச் செயலாளராக இருந்த சுமந்திரனைப் பதில் பொதுச் செயலாளராக நியமிப்பது என மத்திய குழு இன்று உடனடியாகவே தீர்மானித்தது.
அந்த முடிவுக்கு கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சிறீதரன் எம்.பி, ஸ்ரீநேசன் எம்.பி, மற்றும் முன்னாள் எம்.பி யோகேஸ்வரன் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். எனினும், அவர்களின் எதிர்ப்பை மீறி அந்த நியமனத்தை மத்திய குழு மேற்கொண்டுள்ளது.
மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயம் குறித்தும் இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு்ள்ளது.
காத்திரமான முன்நகர்வுகள்
தேர்தலை தனியாகத் தமிழரசுக் கட்சியாக எதிர்கொண்டாலும், மற்றைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்னரே இணக்க உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா மரணித்துள்ள நிலையில் கட்சிக்கு எதிராக, கட்சியின் பிரமுகர்களுக்கு எதிராக, முன்னெடுக்கப்பட்ட வன்முறை பாங்கிலான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் குறித்து யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் காத்திரமான முன்நகர்வுகள் இல்லாவிட்டால், அந்த நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களில் முக்கிய பிரமுகர்கள் இருப்பதையும் கவனத்தில் கொண்டு, அந்த விடயத்தை குற்ற புலனாய்வுப் பிரிவினர் மூலம் துரிதமாக முன்னெடுத்து, புலனாய்வு செய்து விசாரிப்பதற்கான அழுத்தத்தை, நடவடிக்கைகளை கொழும்பில் கட்சி ரீதியாக மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அறியவந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |