மக்கள் வெளியேறுவதை தடுக்கும் ஹமாஸ் அமைப்பினர்: இஸ்ரேல் பகிரங்க குற்றச்சாட்டு
காசாவில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதை ஹமாஸ் அமைப்பினர் தடுப்பதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்கியதைத் தொடர்ந்து, காசா நகரில் அவர்களின் பதுங்குமிடங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனையடுத்து, அந்நகரில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் அரசு உத்தரவிட்டது.
மக்கள் செல்லும் வழிகளில் தாக்குதல்
அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் காசாவின் தெற்கு பகுதிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதற்கான காலக்கெடுவை இஸ்ரேல் இராணுவம் நீட்டித்துள்ளது.
அந்நாட்டு நேரப்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, மக்கள் செல்லும் வழிகளில் தாக்குதல் நடத்த மாட்டோம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மக்கள் வெளியேற வேண்டும் என இராணுவம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஏற்கனவே அவர்களின் குடும்பத்தை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று விட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த காலக்கெடு முடிந்த உடன், தரைவழியாகவும் சென்று இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானப்படை தாக்குதல்
இந்நிலையில், காசா நகரில் இருந்து, சொந்த பாதுகாப்பிற்காக வெளியேறும் பொது மக்களை ஹமாஸ் அமைப்பினர் தடுத்து நிறுத்துவதாக குற்றம்சாட்டி உள்ள இஸ்ரேல் இராணுவம், பொது மக்களை , தங்களின் பாதுகாப்பு கேடயமாக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
மேற்கு கரை பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் 33 பேரை கைது செய்துள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலின் விமானப்படை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரியான, அல் கேத்ரா என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹமாஸ் அமைப்பின் கடற்படை பிரிவு கமாண்டராக செயல்பட்டதாகவும், இன்னும் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் ஜிகாத் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் இஸ்ரேல் விமானப்படை கூறியுள்ளது.