உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள கம்மன்பில
புதிய இணைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இலங்கையின் அரச புலனாய்வு அதிகாரிகள் செயற்பட்டதாக கூறுவது முற்றிலும் போலியான ஒரு குற்றச்சாட்டு என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை ஊடகமான செனல் 4 ஆனது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியதாக கூறியிருந்தது.
இதில் செனல் 4 எனும் ஊடகமானது தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த ஜக்கிய இராச்சியத்தின் ஒளிப்பரப்புக் கூட்டுத்தாபனம் என்பதோடு அது இதுவரை காலமும் இலங்கைக்கு எதிரான அணுகுமுறைகளை கடைப்பிடித்து வந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டியது.
மேலும் ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் தொடர்பாக இராணுவம் தவிர முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது செனல் 4 பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இதனடிப்படையில் கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நாம் முன்வைத்த காரணத்திற்காக அவர் என்னையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் அமைச்சரவையிலிருந்து வெளியேற்றிதோடு அவர் எழுதிய புத்தகத்திலும் எங்களை சாடியிருந்தார். ஆகவே, அவரை காப்பாற்ற நாம் முன்வர மாட்டோம்.
எவ்வாறாக இருந்த போதிலும் நாட்டினுடைய உளவுத்துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அவர்களை காப்பாற்றுவது அந்நாட்டினுடைய அரசியல்வாதிகளின் கடமையாகும்.
தாக்குதலுக்கான திட்டம்
2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் ஆகியோர் புத்தளத்தில் உள்ள சஹ்ரானின் வீட்டில் வைத்து குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டதாக அஸாத் மௌலானா குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், 2019ஆம் ஆண்டு குறித்த வீட்டை சோதனையிட்ட போது, வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டிருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் தான் அந்த வீடு கட்டப்பட்டதாக தெரியவந்தது. எனவே, அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என இதிலிருந்து தெரிய வருகின்றது என உதய கம்மன்பில கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவருடைய உரையை இக் காணொளியில் காணலாம்,
முதலாம் இணைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள, நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். ஐ. இமாமின் அறிக்கையை இன்று வெளியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரவித்துள்ளார்.
இன்று (28) காலை 10 மணிக்கு கட்சியின் தலைமையகத்தில் இருந்து ஊடகங்களுக்கு வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு அறிக்கைகள்
ஏற்கனவே இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ. என். டி. அல்விஸினின் அறிக்கையொன்றை கடந்த 21ஆம் திகதி கம்மன்பில வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் தற்போதைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர, தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான ரவி செனவிரத்ன ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ் அறிக்கையின் மூலம் அண்மைக்காலமாக அரசியல் அரங்கில் பாரிய சர்ச்சைகள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதவரை பேசப்படாத தாக்குதலின் பின்னணி
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதற்கு முன்னர் ஒரு வார்த்தை கூட பேசாத அரசியல் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இப்போது இது பற்றி பேசுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |