சம்மாந்துறையில் தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு!

Ampara Sri Lanka Sri Lankan Peoples
By Farook Sihan Dec 20, 2025 02:29 PM GMT
Farook Sihan

Farook Sihan

சம்மாந்துறையில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாரிய உணவுப் பாதுகாப்பு மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான விசேட கிறிஸ்மஸ் பொதிகள் விநியோகிக்கப்படும் விற்பனை நிலையங்கள் நேற்று சுகாதாரப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, கடந்த கால மின்சாரத் தடையினால் பதனிழந்த ஐஸ்கிரீம்களை உற்பத்தி நிறுவனத்திடம் மீள ஒப்படைப்பதாக(Return) தெரிவித்து அதற்கான அறிக்கையைப் பெற்றுக் கொண்டு அதே ஐஸ்கிரீம்களை மோசடியான முறையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை

தரம் குறைந்ததாகக் கண்டறியப்பட்ட அனைத்து ஐஸ்கிரீம்களும் நீதிமன்ற அனுமதியுடன் நேற்று இரவு உடனடியாக அழிக்கப்பட்டன.

சம்மாந்துறையில் தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு! | Fraud Selling Substandard Icecream In Sammanthurai

மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடிய சம்மாந்துறையில் இயங்கும் அரச சார்பு அங்காடி ஒன்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் சுகாதாரப் பிரிவு எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து கடுமையாக செயலாற்றும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சோதனை நடவடிக்கை, சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்க, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலுக்கமைய நடைபெற்றுள்ளது.