பிரமிட் போன்ற மோசடிக்குள் மக்கள் சிக்குவதற்கு இதுவே காரணம்: மத்திய வங்கியின் ஆளுநர் கூறும் விடயம்
பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான அறிவு இல்லாமையினாலேயே பிரமிட் போன்ற மோசடிக்குள் பலர் சிக்கிவருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் புதிய தொழிநுட்ப சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மோசடிக்கு ஆளாகும் வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், உங்கள் கையில் பணம் இருந்தாலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், மோசடிக்கு ஆளாக நேரிடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களைப் பார்க்கிறோம். அதில் சலுகைகள் காட்சிப்படுத்தப்படுகிறது.
இவற்றை வழங்குவதாக மின்னஞ்சல்கள் வருகின்றன. இப்போது, புதிதாக வந்துள்ள விடயம் என்னவென்றால், பல்வேறு விவசாய நடவடிக்கைகளுக்காக பணம் திரட்டுவதற்காக விரிவாக விளம்பரம் செய்கிறார்கள்.
நீங்கள் மரங்களை நட்டு முதலீடு செய்தால், நீங்கள் பெரும் நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் பழங்களை பயிரிட்டால், அவை கிடைக்கும் என்றும், அல்லது நீங்கள் வல்லப்பட்டை பயிரிட்டால், அவை கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
பணத்தை இழக்கும் போக்கு
சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, முதலீடு என்ற போர்வையில் மோசடியாகப் பணத்தைப் பெற்று, பின்னர் அந்தப் பணத்தை பிரமிட் திட்டங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்படாத வைப்புத்தொகைகளிலோ வைப்பதன் மூலம் பணத்தை இழக்கும் போக்கு உள்ளது.
இந்த நிலையில் மக்களின் நிதி அறிவை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.