ரூ.37 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருளுடன் 23 வயது மாணவன் கைது
37 கோடியே 70 இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19) நள்ளிரவு, விமான நிலையத்தின் ‘கோல்ட் ரூட்’ பயணிகள் முனையம் ஊடாக நாட்டிற்குள் நுழைய முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் முதல் முறை
கைது செய்யப்பட்டவர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஆவார். இவர் கனடாவிலிருந்து டுபாய் வழியாக எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நேற்று இரவு 11.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலைய வரலாற்றில், இவ்வளவு அதிக பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.