வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் ஜப்பானுக்கு செல்ல முயன்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கேரிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பானின் நரிட்டா நகருக்கு தப்பிச்செல்ல முயன்ற ஈரானிய பிரஜை ஒருவரே கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் வைத்து குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான சந்தேகநபர் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரானிய பிரஜையை நாடு கடத்த நடவடிக்கை
ஜப்பானின் நரிட்டா நோக்கிப்புறப்படும் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி ஆவணங்களை விமான நிறுவன அதிகாரிகளிடம் சமர்ப்பித்த போது சந்தேகத்தின் அடிப்படையில், ஈரானிய பிரஜை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவரிடமிருந்து போலியான பல்கேரிய கடவுச்சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜை, நாடு கடத்தப்படுவதற்காக கட்டார் ஏர்வேஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.