அந்நியர் வீடுகளுக்கு செல்வோருக்கு : தினம் ஒரு அறிவுரை..!
பொதுவாக நாம் அந்நியர்களின் வீடுகளுக்கு செல்லுதல் என்பது சாதரணமான விடயமே, ஆயினும் நாங்கள் அவ்வாறு செல்லும் போது ஒழுக வேண்டிய பண்புகள் பல உண்டு.
நாம் செல்லும் வீட்டில், அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.( 24:28)
நபி ஸல் அவர்கள் சஃத் பின் உபாதா அவர்களிடம் ( வீட்டின் உள்ளே வர ) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று சலாம் கூறி அனுமதி கோரினார்கள். சஃத் நபி (ஸல்) அவர்களுக்குக் கேட்காதவாறு ( வேண்டுமென்றே ) வ அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார்கள். நபி ஸல அவர்கள் மூன்று முறை சலாம் சொல்ல சஃதும் மூன்று முறை பெருமானாருக்குக் கேட்காதவாறு பதில் சலாம் கூறினார்கள்.
நபி ஸல் அவர்கல் திரும்பிவிட்டார்கள். சஃத் நபியவர்களை பின் தொடர்ந்து சென்று அல்லாஹ்வின் தூதரே ! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அற்பணமாகட்டும் நீங்கள் கூறிய சலாம் அனைத்தும் என்காதில் விழாமல் இருக்கவில்லை உங்களுக்குக் கேட்காதவாறு உங்களுக்கு நான் பதில் கூறினேன் உங்களது சலாத்தையும் பரகத்தையும் நான் அதிகம் பெற விரும்பினேன் என்று கூறினார்கள். இதை அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
( நூல் : அஹ்மத் 11998)
மூன்று தடவைக்கு மேல் அனுமதி கேட்கத் தேவையில்லை
அனுமதி கேட்டும் தகுந்த பதில் வரவில்லை என்றால் அங்கிருந்து சென்று விடுவது சிறந்தது.
உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்' என்று நபி ஸல் கூறியதாக அபூ ஸயீத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
( நூல் : புஹாரி 6245 )
அனுமதி கேட்க வேண்டிய நேரங்கள்
பருவ வயதை அடையாதவர்கள் அனுமதி கேட்க வேண்டிய நேரங்களை இஸ்லாம் வகுத்து தந்துள்ளது.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவவயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும்.
இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.( 24:58-59)
எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது
பிறருடைய வீடுகளுக்குள் எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது இதனை இஸ்லாம் முற்றாக தடுத்துள்ளது.
உன் அனுமதியின்றி ஒருவர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
( நூல் : புஹாரி 6902)
நுழைவதற்கு அனுமதிக்கபட்ட இடம்
அனுமதி பெறாமல் உள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட சில இடங்கள் காணப்படுகின்றன.
யாரும் குடியிருக்காத வீட்டில் உங்களின் பொருள் இருந்தால் அங்கே நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.( 24:29)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |