இலவச கோதுமை மாவுக்கு பாக். மக்கள் மோதல்: 4 பேர் பலி (Video)

Food Shortages Pakistan
By Fathima Mar 30, 2023 08:17 AM GMT

ரம்ழான் நோன்பு கடைப்பிடித்துவரும் பாகிஸ்தானின் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன.

தற்போது ரம்ழான் நோன்பு கடைபிடிக்கப்படு வருவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கிராம் கோதுமை மாவு வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

மக்கள் முண்டியடிப்பு

இந்த நிலையில், அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை விநியோகம் செய்வதற்காக அதிகாரிகள் லொறியில் எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்துள்ளனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், விநியோக நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னதாகவே பொதுமக்கள் அந்த லொறியை மடக்கிப் பிடித்து, லொறி மீது ஏறி ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு மாவை அள்ளிச் சென்றுள்ளனர்.

இலவச கோதுமை

இதனிடையே இலவச கோதுமை மாவைப் பெறுவதற்காகச் சென்ற பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்த விடயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிரிழந்த 4 பேருமே முதியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

பல்வேறு இடங்களில் இந்த உயிரிழப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.