சாய்ந்தமருதில் வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்த தோணா சுத்திகரிப்பு பணி (Photos)
சாய்ந்தமருதில் வெள்ள அனர்த்த அபாய நிலமையை கருத்தில் கொண்டு சாய்ந்தமருது தோணாவை சுத்திகரிப்பு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் நேற்று (15.07.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்றும் (16.07.2023) முன்னெடுக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் 3 வருடங்களாக எவ்வித புனரமைப்பும் இன்றி குறித்த தோணா காணப்பட்டதுடன் வெள்ள அனர்த்தம் சுற்றுச்சூழல் மாசடைதல் உருவானதுடன் மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
தோணா சீர் செய்யப்பட வேண்டும்
இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக அண்மையில் நடைபெற்று முடிந்த பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த தோணா சீர் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக இப்பணி முன்னெடுக்கப்படுகிறது.
இது தொடர்பில் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.சி.எம்.றியாஸ் கூறியதாவது, சகல தரப்பினரையும் இச்செயற்திட்டத்திற்கு ஒத்துழப்பு வழங்க வேண்டும்.
மேலும் தோணாவினை அண்டிய பகுதியில் கழிவுகள் தேங்காமல் கல்முனை மாநகரசபையினர் பொலிஸ் சுற்றுச் சூழல் பாதுகாப்புப்பிரிவு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சுற்றுச்சுழலுக்குத் தீங்கான முறையில் அசுத்தங்களை வீசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தோணா சுத்திகரிப்பு வேலைத்திட்ட மேற்பார்வை பணிகளில் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்முனை மாநகர சபை மேற்பார்வை உத்தியோகத்தர் யூ.கே.காலித்தீன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச சபை ஒருங்கிணைந்து இதனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















