இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகள்
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அருள்வாக்கை ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இஸ்லாத்தின் அஸ்திவாரம் ஐந்து தூண்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் முதன்மையாக லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதூர் ரசூலில்லாஹி என்று சாட்சியம் கூறுவது. அதற்கு பிறகு தொழுகையை நிலைநிறுத்துவது, ஜகாத் நிறைவேற்றுவது, ஹஜ் செய்வது, ரமலானின் நோன்புகளை நோற்பது. இந்த ஐந்து விஷயங்களும் ஈமானின் மாபெரும் கோட்பாடுகளாகவும் அதிமுக்கிய கடமைகளாகவும் இருக்கின்றன.
நபி(ஸல்) அவர்கள் இந்த பரிசுத்த ஹதீஸில் இஸ்லாத்தை ஒரு கூடாரத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள்.
அந்த கூடாரம் ஐந்து கம்பங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. கலிமா ஷஹாதத் அந்த கூடாரத்தின் நடுவில் நிற்கும் கம்பம் போன்றது. மற்ற நான்கு கடமைகளும் கூடாரத்தின் நான்கு மூலைகளில் நிறுவப்பட்டுள்ள அந்த நான்கு கம்புகளை போன்று உள்ளன.
நடுவிலுள்ள கம்பம் இல்லையென்றால் கூடாரம் நிலைபெற்று நிற்கவே முடியாது. அந்த நடுக்கம்பம் இருந்த மற்ற நான்கு பக்கங்களில் ஏதேனுமொரு மூலையில் கம்பு இல்லாது போனாலும் கூடாரம் நிலைநின்றுவிடும்.
ஆனால் கம்பு இல்லாத அந்த மூலை சரிந்து வீழ்ந்து குறையுள்ளதாக காணப்படும். இந்த பரிசுத்த வாக்கை கேட்ட பிறகு இஸ்லாத்தின் இந்த கூடாரத்தை நாங்கள் எந்தளவு நிலை நிறுத்தியுள்ளோம்.
மேலும் எந்த ஒரு கடமையை நாங்கள் சரிவர முழுமையாக நிறைவேற்றி வருகிறோம் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
தொழுகை
ஈமானுக்கு பிறகு எல்லாவற்றிற்கும் முதன்மையான மிக முக்கியமான கடமை தொழுகையேயாகும்.
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் ”அல்லாஹ்விடம் எல்லாவற்றை விட மிகப்பிரியமான அமல் எது?” என விசாரித்தேன். அதற்கு “தொழுகை“ என அருளினார்கள்.
திரும்ப நான் “பிறகு அது?“ என விசாரித்தேன். அதற்கு அன்னார் “பெற்றோர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளல்“ என திருவுளமானார்கள்.
மறுபடியும் நான் “அதற்கு பிறகு எது?“ எனக் கேட்டதற்கு “ஜிஹாத்“ என மொழிந்தார்கள்.
ஹஜ்ரத் இப்னு உமர் அவர்களும் ஹஜ்ரத் உம்மு ஃபர்வா(ரலி) அவர்களும் ”முதல் நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது மிகச் சிறந்த அமலாகும்” என அறிவிக்கின்றார்கள்.
இதன்மூலம் ஈமானுக்கு பிறகு எல்லாவற்றிற்கும் உயர்வானது தொழுகையே என்ற உலமாக்களின் கூற்றிற்கு ஆதாரம் கிடைக்கிறது என முல்லா அலீ காரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.