அந்தமானில் சிக்கித் தவிக்கும் கல்குடா கடற்றொழிலாளர்களை மீட்குமாறு கோரிக்கை!
அந்தமானில் 6 மாதங்களாகச் சிக்கித் தவிக்கும் கல்குடா கடற்றொழிலாளர்கள் நால்வரையும் மீட்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 4 கடற்றொழிலாளர்கள் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்த நிலையில், அந்தமான் தீவில் தங்கி நின்று, ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்யுள்ளது.
இன்றுவரை இலங்கைக்குத் திரும்ப முடியாமல் அத்தீவுக் கூட்டங்களில் சிக்கித் தவிக்கும் அந்த கடற்றொழிலாளரகளை மீட்டெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் கவனத்துக்கு
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் நேற்று முன் தினம் (11.04.2023) இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதேச மக்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டபோதே அந்தமான் தீவில் சிக்கித் தவிக்கும் கல்குடா கடற்றொழிலாளர்கள் தொடர்பான விடயமும், கல்குடா அல் அமான் படகோட்டிகள் சங்க உறுப்பினரான எச்.எம். தௌபீக் மற்றும் மீன்பிடி உத்தியோகத்தரான முஹம்மத் இம்தியாஸ் ஆகியோரால் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்கள், கடற்றொழிலாளர்களான ஏ.எம். முஹாஜித் (வயது 34), எம்.எச்.எம். றிஸ்வி (வயது 35), பி.எம். இர்ஷாத் (வயது 33), எம். அஸ்வர் (வயது 29) ஆகியோர் முறைப்படி மீன்பிடிக்கான அனுமதி பெற்றுக்கொண்டு கடந்த 2022 செப்டம்பர் 25ஆம் திகதி வாழைச்சேனையிலிருந்து வங்காளக் கடலுக்கு மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.
எனினும், வழமையாக மீன்பிடியில் ஈடுபட்டுத் திரும்பும் குறிப்பிட்டதொரு காலத்தையும் தாண்டி, அவர்கள் கரை திரும்பாததால் நாங்கள் அவர்களைத் தேட ஆரம்பித்தோம். அப்போதுதான் அவர்கள் சென்ற படகின் இயந்திரம் செயலிழந்து, அந்த கடற்றொழிலாளர்கள் அந்தமான் தீவில் சிக்கித் தத்தளிப்பது தெரியவந்துள்ளது.

மீட்டுத் தருமாறு வேண்டுகோள்
இந்நிலையில், இந்தியக் கரையோரக் காவல் துறையினர் அவர்களைக் காப்பாற்றிக் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இவ்விடயம் குறித்து இலங்கை கடற்றொழில் அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இந்தியத் தூதரகம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களுக்கும் அறிவித்து, கடற்றொழிலாளர்களை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆயினும், இப்பொழுது ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை மீட்பதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான தங்களிடம் இந்த விடயத்தை சமர்ப்பிக்கின்றோம் என்றுள்ளனர்.
அவர்களது கோரிக்கை தொடர்பாகக் கருத்து தெரிவித்த அமைச்சர் நஸீர் அஹமட், இந்த விடயத்துக்கு முன்னுரிமை அளித்து, அந்தமான் தீவில் சிக்கித் தவிக்கும் கல்குடா கடற்றொழிலாளர்களை மீட்டெடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.