பெரும்பாலான கடற்றொழிலாளர்களுக்கு நீச்சல் திறன் இல்லை : இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவிப்பு
நாட்டிலுள்ள 90 வீதமான கடற்றொழிலாளர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான கடற்றொழிலாளார்கள் தங்களுக்கு நீந்த முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர்.
எனினும் இலங்கையின் கடற்றொழிலாளார்களுக்கு இருக்கும் நீச்சல் திறன் கடலில் உயிரைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம், நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவுகோல்
ஒரு நீச்சல் வீரர் 10 நிமிடங்களில் அமைதியான நீரில் குறைந்தது 200 மீட்டர் தொடர்ந்து நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும்.
சர்வதேச அளவுகோல்களின்படி, உயிரைக் காப்பாற்றுபவர் ஒருவரைக் காப்பாற்ற ஆறு நிமிடங்களில் 200 மீட்டர் நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும்.
கடல் போன்ற வேகமான நீரில், ஒரு நீச்சல் வீரர் 400 மீட்டர்களை ஒன்பது நிமிடங்களில் நீந்த வேண்டும், அதிலும் ஒரு உயிர்காப்பவர் அமைதியான நீரில் நீந்த குறைந்தபட்சம் ஆறு நிமிடங்களை மாத்திரமே எடுக்க வேண்டும் என்பது உடற்பயிற்சி தரநிலையாகும்.
சுகாதார அமைச்சு தகவல்
இந்தநிலையில் இலங்கையில் தினமும் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக
சுகாதார அமைச்சின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கடற்றொழிலாளர்கள் தமது உயிர்காக்கும் ஆடைகளை அணிவதில்லை.
அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் உயிர்க்காக்கும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன எனினும் அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படவில்லை.
அவர்கள் கடலில் எந்த நீர் நிலையிலும் நீந்தலாம் என்பதால் அந்த ஆடைகள் தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதுவதாக இலங்கை உயிர்காக்கும் சங்க பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.