சமூக வலைத்தளத்தில் கசிந்த விசாரணை காணொலி: புதிய சிக்கலில் காவல்துறை
அத்துருகிரியவில் (Athurugiriya) க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை காவல்துறையினர் (Sri Lanka Police) மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இலங்கை காவல்துறையினருக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றாது, சுரேந்திர வசந்த பெரேரா கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துருகிரியவில் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பச்சை குத்தும் கடை உரிமையாளர் துலான் சஞ்சுலவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
காவல்துறை விசாரணை
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான இலங்கை காவல்துறையினரின் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வகுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்குட்படாது காவல்துறையினர் துலான் சஞ்சுலவிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேக நபர்களிடம் பெற்றுக் கொள்ளப்படும் வாக்குமூலங்களின் காணொளிகள் மற்றும் படங்களை அனுமதியின்றி வெளியிட முடியாதென முன்னாள் இலங்கை காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன அறிவுறுத்தியிருந்தார்.
சந்தேக நபர்
சட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் குறித்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாகவும், இந்த சட்டத்தை மீறும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பின்னணியில், துலான் சஞ்சுலவிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாக மனித உரிமை செயற்பாடுகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள்
குற்ற விசாரணைகள் சட்ட நடவடிக்கைகளுக்குட்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற போதிலும், இலங்கை காவல்துறையினர் குறித்த நடவடிக்கையை மீறி செயல்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
விளம்பரத்துக்காக மாத்திரம் தற்போதைய இலங்கை காவல்துறையினர் செயல்படுவதாகவும் இதனடிப்படையில், துலான் சஞ்சுலவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் பாரியளவில் பாதிக்கப்படுமென அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், விளம்பரத்துக்காக செயல்பட்ட இலங்கை காவல்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சாலிய பீரிஸ் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |