சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடி
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்' என்ற பெயரில் நிதி மோசடி நடைபெறுவது குறித்து இலங்கை காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த மோசடியில் மோசடிக்காரர்கள், விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளாக நடித்து, வாட்ஸ்அப் மூலம் தனிநபர்களைத் தொடர்புகொண்டு, மூன்று போலி இணையதளங்கள் வழியாக 'SriLankan.apk' என்ற மொபைல் செயலியை நிறுவுமாறு அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களை தொலைவிலிருந்து அணுகி, மோசடி செய்பவர்கள் முக்கியமான தனிப்பட்ட தரவுகளைப் பெற வழிவகுக்கும் ஒரு 'ட்ரோஜன் ஹார்ஸ்' தான் இந்த செயலி என்று அதிகாரிகள் தெரிவித்துளள்ளனர்.
மோசடித் திட்டங்கள்
இதன்படி குற்றவாளிகள், வங்கிச் செயலிகளுக்கான இந்த அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பயன்படுத்தி, ஒருமுறை கடவுச்சொற்கள் (OTPகள்), வங்கி விவரங்கள் மற்றும் அங்கீகாரத் தரவுகளைக் கைப்பற்றி, மோசடியாக மற்ற கணக்குகளுக்குப் பணத்தை மாற்றுகிறார்கள் என்று காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி பின்வரும் தொலைபேசி எண்கள் இந்த மோசடியுடன் தொடர்புடையதாகப் பயன்படுத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
'077 45 58 361,
011 77 71 979,
074 11 42 208,
077 57 91 209,
074 32 68 200'
இதற்கமைய உடனடி நிதி ஆதாயத்தை நாடும் நபர்களைக் குறிவைத்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்ட காவல்துறை, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், இதுபோன்ற மோசடித் திட்டங்களுக்குப் பலியாகாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.