இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் கைது செய்யப்படும் அபாயம்?
இலங்கையின் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதற்கு சில நாடுகள் இணைந்து முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ராணுவ தளபதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி சர்வதேச சட்டங்களுக்கு அமைய வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் இந்த விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை படையினருக்கு எதிராக தொடர்ச்சியாக சில நாடுகள் ஆதாரங்களை திரட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவ உயர் அதிகாரிகள் எந்த ஒரு நாட்டிலும் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றங்களில் தண்டிக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே புறச் சக்திகளின் தலையீடுகளை இலங்கை வெளிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
சில நாடுகள் இலங்கையில் இடம் பெற்ற போர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானது அல்ல அது தமிழ் மக்களுக்கு எதிரானது என அடையாளப்படுத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர செயற்பட்டு வருகின்றார்.
இந்த முயற்சியானது படை வீரர்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் எனவும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் சரத் வீரசேகர சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை படையினர் சர்வதேச நீதிமன்றங்களில் தண்டிக்கப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.