ஜனாதிபதியின் தலைமையில் ‘சூரிய திருவிழா 2023’ நிறைவு நாள் வைபவம்

Sri Lanka Freedom Party
By Nafeel Apr 20, 2023 09:32 AM GMT
Nafeel

Nafeel

பாதுகாப்பு அமைச்சின் ‘சூரிய திருவிழா 2023’ (சூரிய மங்கல்லய) நிறைவு நாள் வைபவம் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அக்குரேகொட பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களின் பங்கேற்புடன், நாள் முழுவதும் இடம்பெற்ற இந்த புத்தாண்டு கொண்டாட்டம் பல புத்தாண்டு விளையாட்டுக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமயமான நடன நிகழ்ச்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டுகளித்தார்.

புத்தாண்டு அழகன் மற்றும் அழகி உள்ளிட்ட புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்(ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்னஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார். பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளரும் (நிர்வாகம்) நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான காமினி மஹகமகே, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ராணி குணரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 20-04-2023