இமாம் ஆணைக்குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது! அருட்தந்தை சிரில் காமினி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்த நீதியரசர் எஸ்.ஐ. இமாம் ஆணைக்குழு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கொழும்பு பேராயர் இல்ல ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி இதனைத் தெரிவித்துள்ளார்.
இமாம் ஆணைக்குழு
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது.
இமாம் ஆணைக்குழுவின் அறிக்கையில் சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் ஆகியோரின் சாட்சியங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது.
அசாத் மௌலானாவின் சாட்சியமோ, அவரது வாக்குமூலமோ உள்ளடக்கப்படவும் இல்லை. அதுகுறித்து அவரிடம் விசாரிக்கப்படவும் இல்லை.
எனவே முதலில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், வேறு நபர்களின் வாக்குமூலங்களை மட்டும் பதிவு செய்திருப்பதன் காரணமாக இமாம் ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.