முழுமையாக அழிவடைந்த பயிர்கள்! போராட்டத்தில் குதித்த கிண்ணியா விவசாயிகள்
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜித் நகர் கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த விவசாயிகள், தமக்கு வழங்கப்பட வேண்டிய மானிய உரம் மற்றும் வெள்ள நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று (17) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
கோரிக்கைகள்
"ஏழைகளின் நிலத்தை சுரண்டாதே!", "உர மானியத்தை வழங்கு!", "பூர்வீக காணிகளை பறிக்காதே!", "விவசாயமே எங்கள் வாழ்வாதாரம்!", "புயலால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஏன் இந்த புறக்கணிப்பு?" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு விவசாயிகள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கல்லறப்பு, சுண்டிகுளம், இரட்டைக் குளம், வாழைமடு ஆகிய பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இப்பகுதிகளில் சுமார் 7000 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில், அண்மையில் வீசிய 'டிக்வா' புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 5000 ஏக்கர் வரையிலான பயிர்கள் முழுமையாக அழிந்துள்ளன என்றும், இங்கு வசித்து வருகின்ற 3500 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 வருடங்களாக எவ்வித தடையுமின்றி விவசாயம் செய்து வரும் தமக்கு, இம்முறை மாத்திரமே மானிய பசளையும் ஏனைய நிவாரண உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
2025 ஆம் ஆண்டுக்கான ஏக்கர் வரி அனைத்து வயல் நிலங்களுக்கும் முறையாகச் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தமக்கான உதவிகள் மறுக்கப்படுவதன் காரணம் என்ன என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
பயிர்ச் சேதங்கள்
பயிர்ச் சேதங்கள் ஏற்பட்டு இவ்வளவு காலமான போதிலும், அழிவுகளைப் பார்வையிடவோ அல்லது மதிப்பீடு செய்யவோ எந்தவொரு அதிகாரியும் இதுவரையில் கள விஜயம் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்த கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி, "உங்களுடைய கோரிக்கைகளை அந்தந்த கிராம உத்தியோகத்தர் மற்றும் கமல சேவை திணைக்கள உத்தியோகத்தர்களிடம் முறைப்படி முன்வையுங்கள்.
தற்போது குறித்த காணி சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை என்னால் இது குறித்து எவ்வித முடிவையும் எடுக்க முடியாது. நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க முடியும்." என்று தெரிவித்தார்.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் விரைந்து தீர்வு வழங்காவிடில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.