இலங்கை இராணுவத்தின் மீது களங்கம் ஏற்படுத்த போலியான காணொளி வெளியிடப்பட்டுள்ளது
இலங்கையில் பொது மக்களுக்கு இராணுவத்தின் மீதுள்ள நம்பிக்கையை இல்லாமல் செய்து களங்கம் ஏற்படுத்தி வெறுப்பை உருவாக்கும் நோக்கில் போலியான காணொளிகள் அண்மையில் வெளியிடப்பட்டிருப்பதை இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கே.ஏ.என் ரசிக்க குமார வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக சமூக வலையத்தளங்களில் இராணுவம் தொடர்பான பொய்யான தகவல் அடங்கிய காணொளிகளை சிலர் வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் விளம்பரப்படுத்தல்
மேலும் தெரிவிக்கையில், இராணுவத்தில் சிறந்த தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இல்லாத சிலரால் வழங்கப்பட்ட முறையாக உறுதிப்படுத்தப்படாத, பொய்யான தகவல்களை திரட்டி காணெயளியாக்கி தங்களின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அந்த காணொளிகளில், இராணுவ முகாம்களில் வீரர்களை புதிய இடத்தில் நிலைநிறுத்துவது, அவசரமான குறுகிய கால முடிவு என்று தவறாகக் கூறுவதாகவும் இது இராணுவத்தின் பொருத்தப்பாட்டுக்கு உட்பட்டதல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த இடமாற்றங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் நீண்டகால மூலோபாய திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இராணுவத் தளபதி, முப்படைகளின் சேனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முழு மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொறுப்பற்ற சுயநலமான இலாபம்
இதன்படி, ஊடக நெறிமுறைகளுக்கு எதிராக செயற்படும் சில பொறுப்பற்ற நபர்களின் சுய இலாபங்களுக்காக பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளனர். இவ்வாறான அடிப்படையற்ற செயற்பாடுகள் இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நீண்டகால சுமூகமான உறவை சீர்குலைக்கும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான செயற்பாடுகளால் எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |