எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : நேரடியாக பாதிக்கப்பட்ட 15,032 மீனவர்களுக்கு நட்டஈடு வழங்கினோம் - காஞ்சன

Sri Lanka
By Nafeel May 10, 2023 04:53 PM GMT
Nafeel

Nafeel

எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

எம்.வி.எக்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கும்,கடற்கரையோரங்களுக்கும் ஏற்பட்ட மாசடைவினை குறுகிய காலத்துக்குள் தூய்மைப்படுத்தினோம்.

கம்பஹா,கொழும்பு,களுத்துறை ஆகிய மாவட்டங்களில் நேரடியாக பாதிக்கப்பட்ட 15032 மீனவர்களுக்கு மொத்தமாக 3 பில்லியன் ரூபா வரை நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் நான் கடற்றொழில் வளங்கள் இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தேன்.

இதன்போது மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் கடற்றொழில் வளங்கள் அமைச்சு ஊடாக விசேட கவனம் செலுத்தப்பட்டது

. நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பொறுப்பற்ற வகையில் தெரிவித்த கருத்துக்கள் நட்டஈடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு எங்கு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பதை 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க முடியாது. துறைசார் நிபுணர்கள் சமர்ப்பித்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு சட்ட ஆலோசனைகளுக்கு அமைய சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கப்பல் விபத்து தேசிய பிரச்சினையாக கருதப்படுகிறது.ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.

இந்த கப்பல் விபத்து விவகாரத்தில் ஒரு துறை மாத்திரம் தனித்து செயற்பட முடியாது.

நீதியமைச்சின் தலைமைத்துவத்தில் அமைச்சுக்கள்,திணைக்களங்கள்,அதிகார சபைகள் உட்பட சகல தரப்புக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டன.

கடல் வளத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை இழிவளவாக்குவதற்கும்,கடற்கரையோரங்களை பாதுகாப்பதற்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுத்தோம்.

தீ விபத்துக்கு உள்ளான கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை விதித்தோம்.ஆகவே இவ்விடயத்தில் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சிறந்த முறையில் செயற்படுத்தினோம்.

முழுமையான மதிப்பீடு செய்யாமல் நியூ டைமன் கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என சட்டமா அதிபர் உறுதியாக அறிவுறுத்தியிருந்த பின்னணியில் கப்பலை வெளியேற்றியமை பிரச்சினைக்குரியதாக உள்ளது.

ஆகவே இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழுவை அமைக்குமாறு ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த விடயத்தில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடல் மார்க்கத்தில் கேந்திர மையமாக இலங்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கொள்கையில் இருந்துக் கொண்டு கப்பல் போக்குவரத்துக்கும்,கப்பலில் கொண்டு செல்லும் பொருட்களுக்கும் தடை விதிக்க முடியாது.ஒரு தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் அடிப்படையற்றது.

இந்த கப்பல் விபத்து இலங்கைக்கு புதிதானது.இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவம் பதிவாகவில்லை.

ஆகவே சகல தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமையவே செயற்பட முடியும்.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்றதன் பின்னர் தான் சுனாமி தொடர்பான எச்சரிக்கை மையங்கள் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டன.

ஆகவே யதார்த்தத்தை முதலில் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த கப்பல் விபத்தால் மீனவர்கள் தொழிற்துறை ரீதியாக பாதிக்கப்பட்டார்கள்.

நட்டஈடு வழங்குவதற்காக அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டது.

மீனவர்களுக்கு நட்டஈடு வழங்க கப்பலின் காப்புறுதி நிறுவனம் 3 பில்லியன் ரூபா நிதி வழங்கியது.மீனவர்களுக்கு கட்டம் ,கட்டமாக நட்டஈடு வழங்கப்பட்டது.

15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

மறுபுறம் மறைமுகமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விபத்து தொடர்பை தடுப்பதற்கும், விபத்து ஏற்பட்டதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசேட சட்டங்களை இயற்ற வேண்டும் என்பது குறித்து பாராளுமன்றம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.