யாழில் கல்வியில் இடம்பெறும் முறைகேடு அம்பலம்!

Jaffna Sri Lanka
By Nafeel May 14, 2023 02:17 AM GMT
Nafeel

Nafeel

யாழ். வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆங்கில மொழி விஞ்ஞான பாடப் பரீட்சைக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் ஏற்கனவே தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இடம்பெற்ற பரீட்சை வினாத்தாள் என்பது அம்பலமாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, கடந்த வெள்ளிக்கிழமை யாழ். வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில மொழி விஞ்ஞான பாட பரீட்சை இடம்பெற்றுள்ளது.

ஆனால் குறித்த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் என்பது அம்பலமாகியது.  

யாழில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகி கொண்டு செல்லும் நிலையில் மாணவர்களை ஈர்ப்பதற்காக தமது கல்வி நிறுவனங்களில் பயன்படுத்திய வினாத்தாள்களை யாழ். வலயப் பாடசாலைகளுக்கு விநியோகித்தார்களா என்ற சந்தேகம் வலுக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களையும் ஆசிரியர்களையும் ஈர்ப்பதற்காக பரீட்சை வினாத்தாள்களை வலயக் கல்வி அலுவலகத்திற்குள் நுழைய யார் அனுமதித்தது. இதன் பின்னணி என்ன என்பது தொடர்பில் கல்வி உயர் அதிகாரிகள் ஆராய வேண்டும் .

அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாட்டை உடைத்து பாடசாலைக் கல்வியை அழித்து தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கு யாரோ ஒரு கூட்டம் திட்டமிட்டு செய்த இந்த நடவடிக்கையை பரீட்சை முறைகேடுகள் என்ற அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.