மகிந்தவின் வீட்டுக்காக பல பில்லியன் ரூபா செலவாம்..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் விஜேராம இல்லத்தின் பராமரிப்புக்காக 430 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் வீட்டைப் புதுப்பிக்க 33 லட்சத்து 80 ஆயிரத்து 892 ரூபாயும், 2022ஆம் ஆண்டு 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயும், 2023 ஆம் ஆண்டு 18.336 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
லிப்ட் பொருத்துவதற்காக 150.9 லட்சம் ரூபாயும் ஜெனரேட்டர் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக 48,85,843 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இல்ல பராமரிப்பு
2023 ஆம் ஆண்டில் மட்டும், இல்லத்தை பராமரிப்பதற்காக 383 லட்சம் ரூபா செலவிடப்பட்டதாகவும், 2024 ஆம் ஆண்டில் 946,000 ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் வசித்த அந்த வீடு பின்னர் ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பாக விரிவுபடுத்தப்பட்டதாகவும், அதன் அரசாங்க மதிப்பீட்டு மதிப்பு 3127.84 மில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விஜேராம வீடு 35 ஆயிரத்து 334 சதுர அடி எனவும், வீட்டின் மாத வாடகை 46 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.