முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் ஜனாதிபதி
இலங்கையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறையினை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவினை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றின் போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இச்சந்திப்பில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவும் கலந்து கொண்டுள்ளார்.
திட்டங்கள்
முன்னைய காலப்பகுதியில் இந்திய உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை - இந்தியா உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இருநாட்டு கடற்றொழில் சமூகங்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்புத் திட்டத்தின் மூலம் நீண்டகால தீர்வை எடுப்பதன் முக்கியத்துவமும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் வடமாகாண கடல் பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலங்கை கடற்றொழில் சமூகத்தின் நலன்களை பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என வாக்குறுதி அளித்த ஜனாதிபதி, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி துறையை டிஜிட்டல் மயமாக்க இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |