இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும்! ஜனாதிபதி
இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (02.08.2024) நடைபெற்ற இளைஞர் சந்திப்பில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கம் ஒருபோதும் மறக்கவில்லை. நிதிப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் இவ்வருடம் நிதி ஒதுக்கியுள்ளது.
நிவாரணத்துடன் கூடிய கடன்
ஆசிரியர் சேவையில் புதியவர்களை இணைத்துக் கொள்வதற்கு அடுத்த வருடம் மேலதிக நிதி வழங்கப்படவுள்ளது. சுயதொழிலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு நிவாரணத்துடன் கூடிய கடன் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தில் இணைந்து இளைஞர்கள் முன்னோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் அனுபவத்தைப் பொருட்படுத்தாமல் தனியார் துறை தொழில் வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யுமாறு தனியார் துறையிடம் கோரிக்கை விடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.