உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயம்

Ranil Wickremesinghe Sri Lanka Ministry of Finance Sri Lanka Sri Lanka Government Gazette
By Fathima Jun 01, 2023 11:04 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் பல துறையினருக்கு இன்று (01.06.2023) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்பின்படி, உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய நபர்களாக இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்த வைத்தியர்கள், இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள், இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இலங்கை கட்டடக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், இலங்கையின் அளவு ஆய்வாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், பிரதேச செயலாளரின் கீழ் வணிகங்களை பதிவு செய்த நபர்கள், மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களைக் கொண்ட நபர்கள் (முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கை உழவு இயந்திரங்கள் தவிர) குறிப்பிடப்பட்டுள்ளனர். 

மேலும், 2023 டிசம்பர் 31ஆம் திகதி 18 வயதை நிறைவு செய்தவர்கள் அல்லது 2024 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு 18 வயதை அடையும் அனைத்து நபர்களும் இந்த புதிய விதிக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.