எல்லாவல நீர்வீழ்ச்சியில் உயிரிழந்த நால்வரின் ஜனாஸாக்களும் மீட்கப்பட்டுள்ளன

Ampara
By Independent Writer Mar 23, 2023 12:36 AM GMT
Independent Writer

Independent Writer

எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை குறித்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று இளைஞர்களின் ஜனாஸாக்கள் நேற்று புதன்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒருவரின் ஜனாஸா மீட்கப்பட்ட நிலையில் மேலும் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

அவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து நேற்று மேலும் மூவரின் ஜனாஸாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சம்பவம் நடைபெற்ற நேற்று முன் தினம்(21) மாலை காணாமல் சென்ற நால்வரில் ஒருவரது ஜனாஸா மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய மூவரது ஜனாஸாக்களும் நேற்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வனர்த்தத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஊர்களில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இறந்தவர்களின் விவரம்

  1. மொஹமட் லாபீர் முகம்மது ஸுஹ்ரி (வயது 21) கல்முனை.
  2. அபூக்கர் ஹனாப் (வயது 21) கல்முனை
  3. முகம்மது நபீஸ் (வயது 20) சாய்ந்தமருது.
  4. அஹமட் லெப்பை மொஹமட் அப்சால் (வயது 21) சாய்ந்தமருது.

ஆகிய நால்வரும் மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் குளிப்பதற்காகச் சென்ற நிலையில் நான்கு பேர் நீரில் மூழ்கி இவ்வனர்த்தத்தில் உயிரிழந்தவர்களாவர்.

இதுவரை குறித்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று 17 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எல்லாவல நீர்வீழ்ச்சியில் உயிரிழந்த நால்வரின் ஜனாஸாக்களும் மீட்கப்பட்டுள்ளன | Ellawala Falls In Sri Lanka