புத்தளம் - தில்லையடி கிராமத்தில் யானை தாக்குதல்
புத்தளம் - தில்லையடி கிராமத்தினுள் யானை திடீரென உட்புகுந்து கிராம மக்களின் உடைமைகளுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியதுடன் கிராமத்தில் சிலரையும் தாக்கியுள்ளது.
இன்று (13.10.2023) அதிகாலை காட்டு யானையொன்று திடீரென உட்புகுந்து வீட்டின் சுவர்களை சேதப்படுத்திய நிலையில், அவ்வழியால் சென்றவரையும் தாக்கியதோடு அவரது சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்குதல் பின்னர் குறித்த யானை முச்சக்கர வண்டி திருத்துமிடத்தினூடாக சென்று இரண்டு முச்சக்கர வண்டிகளையும் சேதப்படுத்தியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் பட்டாசு வெடித்து குறித்த யானையை துரத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
யானை ஜயபிம பகுதிக்குள் உட்புகுந்து புத்தளம் - குருநாகல் பிரதான வீதியினைக் கடந்து ஜனாவாச காணிக்குள் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களை தாக்கியுள்ளதாகவும் குறித்த நபரும் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.