இலங்கை மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் உலக வல்லரசுகளின் போர்!
தற்போதைய மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
போர் சூழல்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,''உலக வல்லரசுகளுக்கு இடையேயான இந்த போர் சூழல் நம் நாட்டையும் பாதித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான போரினால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே ஒரே வழி. அரசியல் ஆதாயங்களுக்காக தனித்தனியாக செயல்பட்டால், அது நம்மை மேலும் படுகுழியில் தள்ளத்தான் செய்யும்.
மின் கட்டணத்தை அதிகரிப்பது நல்லதல்ல. ஆனால், நம் நாட்டில் இன்னும் அனல் மின்சாரம் மூலம்தான் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் பல பகுதிகளில் மழை பெய்தாலும், நீர்மின் நிலையங்களில் இன்னும் 100 வீதம் நீர் மின் உற்பத்தி தொடங்கவில்லை.
மின் கட்டணம்
மின்சார சபை அதிகாரிகளும் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். எல்லா நேரத்திலும் மக்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டும் என்று கோருவது நியாயமானதல்ல.
தண்ணீர் கட்டணம் உயரும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த நேரத்தில் தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனவே, அவ்வாறான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்காது.”என தெரிவித்துள்ளார்.