நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

Ampara Sri Lanka Eastern Province
By Fathima Nov 22, 2025 05:57 AM GMT
Fathima

Fathima

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு நேற்று (21) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையில் கோரமின்மை காரணமாக சபை அமர்வை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டு தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்திற்கு மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

புதிய தவிசாளர் 

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான சபை அமர்வு நடைபெறுவதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமும் உறுப்பினர்களுக்கு பதிவு தபாலினூடாக கடிதம் மூலமும் தெரிவித்திருந்தார்.

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு! | Election New Chairman Ninthavur Pradeshiya Sabha

இருந்த போதும் இன்றைய அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்கள் வருகை தந்த நிலையில் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டும் வேறு உறுப்பினர்கள் யாரும் 10.30 மணிவரை சமூகமளிக்கவில்லை.

இந்த நிலையில் புதிய தவிசாளர் தெரிவினை நடத்துவதற்கான சபை அமர்வுக்கான கோரம் 50 வீதம் என்பதால் 07 உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இதனால் 50 வீத கோரமின்றி புதிய தவிசாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் நேற்றைய சபை அமர்வு இருந்தது.

இதனை தொடர்ந்து கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்தில் இடம்பெறும் என்றும் அதற்கான பணிகளை தான் முன்னெடுப்பதாகவும் தெரிவித்து அமர்வை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நிந்தவூர் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ,ஐக்கிய மக்கள் சக்தி என 13 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

இன்றைய அமர்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 04 , தேசிய மக்கள் சக்தி 02 உறுப்பினர்கள் , ஐக்கிய மக்கள் சக்தி 01 உறுப்பினர் ,என 7 பேர் இன்றைய சபை அமர்விற்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தமானி அறிவித்தல் 

நேற்றைய அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் எம்.ஏ. தாஹீர் எம்.பி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எம். அமீர் அலி, தேசிய மக்கள் சக்தி பிராந்திய அமைப்பாளர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்ட குழுவினர், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் அடங்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு! | Election New Chairman Ninthavur Pradeshiya Sabha

நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு அமைய ஆதம்பாவா அஸ்வர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தி இருந்தார்.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கான பிரகடனத்தில் நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவித்தாட்சி அலுவலர் கடந்த 24ஆம் திகதி ஒப்பமிட்டு வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்த ஏ.அஸ்பர் ஜே.பி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள தவிசாளர் பதவிக்கு பிரதித் தவிசாளராக கடமையாற்றி வந்துள்ள சட்டத்தரணி எம் ஐ. இர்பான் பதில் தவிசாளராக கடந்த திங்கட்கிழமை(10) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்ட பின்னர் நேற்று (21) நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery