தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள்

Sajith Premadasa Election
By Mayuri Aug 25, 2024 03:20 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொதுவேட்பாளரைக் களமிறக்க வேண்டாம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் அரசியல் கட்சிப்பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் பொதுக்கட்டமைப்பினால் தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வு

தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கான குறியீடாகவே இப்பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதாகவும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்குளுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்துடன் தம்மைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், அவர்களுடன் பேசுவோம் என தமிழ் பொதுக்கட்டமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள் | Election In Sri Lanka

அதற்கமைய இம்முறை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பொதுக்கட்டமைப்பினருடனான சந்திப்புக்கு அழைப்புவிடுத்திருந்தார்.

அவரை மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள், அதற்கு மறுதினம் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவின் அழைப்புக்கு இணங்க அவரை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சஜித்தின் வேண்டுகோள்

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது தனக்குக் கிடைக்கக்கூடிய தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து, தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதனால் பொதுவேட்பாளரைக் களமிறக்க வேண்டாம் என சஜித் பிரேமதாச தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் சஜித் விடுத்துள்ள வேண்டுகோள் | Election In Sri Lanka

இருப்பினும் இம்முறை தாம் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதற்கான நோக்கத்தைத் தெளிவுபடுத்திய தமிழ் அரசியல் பிரதிநிதிகள், பொதுவேட்பாளரைக் களமிறக்குவதிலிருந்து பின்வாங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW