செப்டெம்பருக்கு முன்னர் தேர்தல்: மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல்

Election Commission of Sri Lanka Mahinda Deshapriya Election
By Fathima Aug 06, 2023 02:33 PM GMT
Fathima

Fathima

ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டு தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாக முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களினால் வாக்கெடுப்பு நடத்தப்படாமை ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினையாகும் எனவும் தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செப்டெம்பருக்கு முன்னர் தேர்தல்: மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல் | Election Before September Mahinda Deshapriya

அதிகாரிகள் நடவடிக்கை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இருந்து ஒரு தேர்தலையாவது நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இரண்டில் ஏதேனும் ஒன்றையாவது உலக ஜனநாயக தினம் வருவதற்கு முன்னர் நடத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் கட்டுப்பாட்டின்றி, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், கவர்னர்கள், செயலாளர்கள், கமிஷனர்கள் நடத்தும் இந்த ஆட்சி சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டெம்பருக்கு முன்னர் தேர்தல்: மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள தகவல் | Election Before September Mahinda Deshapriya

தேர்தல் அவசியமில்லை

இதேவேளை நாட்டில் முறையான அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW