ஹட்டனில் வெட்டு காயங்களுடன் வயோதிப தம்பதியின் சடலங்கள் மீட்பு - பொலிஸார் விசாரணை
ஹட்டன் - டிக்கோயா நகரில் வயோதிபத் தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹட்டன்- டிக்கோயா நகரில் உள்ள வியாபார நிலையமொன்றில், தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் உயிரிழந்திருப்பதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார், மேற்கொண்ட விசாரணைகளில் டிக்கோயா நகரை வசிப்பிடமாக கொண்ட த சக்திவேல் ஆச்சாரி மற்றும் அவரது மனைவி சகுந்தலா தம்பதியினரே (வயது 82) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், அவர்களது பிள்ளைகள் தொடர்ச்சியாக தமது தாய் மற்றும் தந்தைக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட நிலையில் நீண்ட நேரம் பெற்றோர் பதிலளிக்காத நிலையில், அயலவர்களின் உதவியுடன் தமது வீட்டில் சென்று பார்க்கும் படி கோரியுள்ளனர்.
அதனையடுத்தே குறித்த தம்பதியினர் காயங்களுடன் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.