கிழக்கில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்றைய தினம் (31) நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.
புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று கூடிய பிறைகுழு ஏகமனதாக தீர்மானித்தது.
கல்முனை
அந்தவகையில், புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி அஷ்ஷெய்க் ஏ.கலீலுர் ரஹ்மான் (ஸலபி) நிகழ்த்தியுள்ளார்.
இங்கு ஆயிரக்கணக்கான ஆண் பெண் இருபாலாரும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுடன் பலஸ்தீன், காஸா மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
கந்தளாய் இலாஹிய்யா ஜும்மா மஸ்ஜீத் மற்றும் பேராற்று வெளி ஜும்மா மஸ்ஜீத் ஆகிய இடங்களில் பெருநாள் தொழுகைகள் நடைபெற்றன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சாய்ந்தமருது
ஒவ்வொரு வருடமும் சாய்ந்தமருது ஜாமியுல் இஸ்லாஹ் ஜூம்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெறும் திடல் தொழுகை இம்முறையும் மிகவும் சிறந்த முறையில் அப்பிள் தோட்டம் திடலில் இடம்பெற்றுள்ளது.
இத்திடல் தொழுகையினையும், குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஸாதிக் (ஸலபி) நிகழ்த்தி வைத்தார்.
கிண்ணியா
நோன்பு பெருநாள் தினமாகிய இன்று(31) அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இடம் பெற்றது.
இஸ்ரேலுக்கு எதிரான இக் கண்டணப் பேரணியில் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன் இதனை திருகோணமலை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது பலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்ட பலஸ்தீனத்துக்கு ஆதரவான மற்றுமொரு நிகழ்வும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி வீசி மைதானத்தில் இடம் பெற்றது.
கோரிக்கை
இதன் போது கருத்து தெரிவித்த எம்.எம்.மஹ்தி பலஸ்தீன மக்கள் பல்வேறு இன்னல்க.ளை எதிர்நோக்கிக் கொண்டு புனிதமான இந்த நாளிலே இருக்கிறார்கள்.
இஸ்ரேல் இன அழிப்பு விடயத்தை செய்து கொண்டிருக்கிறது இதனை இந்த நாடு கண்டிக்க வேண்டும். என்பதுடன் ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
அண்மையில் முஹம்மது ருஸ்தி எனும் இளைஞன் ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனவே ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இளைஞனை விடுதலை செய்ய வேண்டும்.பலஸ்தீன மக்களுக்காக அநுர அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும்.பலஸ்தீனர்களுக்கு தனி நாடாக , தனி ராஜியம் என்ற அடிப்படையில் வழங்கப்படவேண்டும்.
இன அழிப்பை செய்யும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும் நிலை காணப்படுகிறது. ஆகவே கைது செய்யப்பட்ட முஹம்மது ருஸ்தி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறோம்.தற்போது அரசாங்கமும் பலஸ்தீன மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.
மூதூர்
மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (31) காலை நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது.
அல்ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இவ் நோன்பு பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
தொழுகையினை மௌலவி அப்துல் லத்தீப் (ஸலாமி) நிகழ்த்தியிருந்தார்.
தொழுகையில் அதிகளவான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டதோடு தொழுகை நிறைவடைந்து தங்களுக்குள் கைகுழுக்கி பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
அம்பாறை
ஈதுல் அல்ஹா புனித நோன்பு பெருநாள் தொழுகை கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று (31) சிறப்பாக நடைபெற்றன.
ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது.
இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.
இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


