மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள விடயம்: பிரதமர் அறிவிப்பு
மாணவர்களுக்கு இரண்டாம் மொழி பாடத்தை கட்டயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது 6 முதல் 9ஆம் வகுப்பு வரையான தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு சிங்கள மொழியையும், சிங்கள மொழிமூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் இரண்டாம் மொழிப் பாடமாகக் கட்டாயமாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இரண்டாம் மொழிப் பாடம்
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது சகல பாடசாலைகளிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையான தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு சிங்கள மொழியும், சிங்கள மொழி மூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியும் இரண்டாம் மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.
இதுதவிர 10ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகளில் பயிலும் தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு இரண்டாம் மொழியாக சிங்கள மொழியையும், சிங்கள மொழி மூல மாணவர்களுக்குத் தமிழ் மொழியையும் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 2026ஆம் ஆண்டு முதல் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதுடன், அதற்கு அடுத்த ஆண்டுகளில் ஏனைய வகுப்புகளின் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் வகுப்பறைக்கு வெளியிலும் வேறு மொழிகளை கற்பதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.