இன்னும் 10 வருடங்களில் மீண்டும் வங்குரோத்து நிலை! ரணில்

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka Economy of Sri Lanka
By Fathima Aug 14, 2023 08:19 AM GMT
Fathima

Fathima

கடந்த காலங்களில் நாடும், மக்களும் எதிர்கொண்ட துரதிர்ஷ்டவசமான யுகத்திற்கு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்காத வகையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் எடுக்காவிட்டால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் நாம் வங்குரோத்து நிலையை அடைவோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மாத்தளை புனித தோமஸ் ஆண்கள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு விழா நேற்றைய தினம் (13.08.2023) இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,  அனைத்துத் துறைகளையும் நவீனமயமாக்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எனது எதிர்பார்ப்பு. அதற்கு அவசியமான தொழிநுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ள, தொழில்நுட்ப ஊக்குவிப்பு சபை மற்றும் நாட்டில் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்த டிஜிட்டல் மாற்ற ஆணைக்குழு ஆகியவற்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாத்தளை புனித தோமஸ் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இப்பாடசாலை நிறுவப்பட்ட போது இந்த நாடு பெருந்தோட்டப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. கோப்பி பயிர்ச்செய்கை பாரிய அளவில் விரிவடைந்திருந்தது.

ஆனால் ஒரு சில வருடங்களில் கோப்பிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்து பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அரசாங்கத்துக்கு வருமானம் இல்லாமல் போனது. 15 - 20 வருடங்களின் பின்னர் தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படும் வரை நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

புதிய பெருந்தோட்டப் பயிர்களாக தேயிலை மற்றும் இறப்பர் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பியது. மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படும் நிலையிலும், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், நாடு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டது. இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவோம் என்று அப்போது யாரும் நம்பவில்லை.

மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை என்பது இதற்கு ஒரு நல்ல உதாரணம். பொதுவாக, ஏனைய சந்தர்ப்பங்களில், பிரதமர் பதவியை கைப்பற்ற வரிசையில் வருவார்கள். ஆனால் அப்போது யாரும் முன்வரவில்லை.

ஆனால் அந்தப் பின்னணியில் நான் ஜனாதிபதி பொறுப்பை ஏற்று, அமைச்சரவையை உருவாக்கி நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளைத் தேட ஆரம்பித்தேன்.

நாங்கள் எடுத்த தீர்மானங்களால், நாட்டில் அன்று இருந்த வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது. மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர், மற்றும் இந்த வருட ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் அரசாங்கம் என்ற முறையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பலனை மக்கள் இப்போது அனுபவித்து வருகின்றனர்.

இந்த வருட இறுதிக்குள், கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அதைச் செய்ய அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அதேபோன்று நாடு உற்பத்திப் பொருளாதாரத்திற்கு மாறுவதும் அவசியம். அந்தத் திட்டத்தை தற்போது செயல்படுத்தியுள்ளோம். இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகளால் நாடு “வங்குரோத்தாகி விட்டது” என்று குத்தப்பட்ட முத்திரையை அகற்ற முடிந்தாலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் எடுக்காவிட்டால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் நாம் வங்குரோத்து நிலையை அடைவோம்.

எனவே புதிய பொறிமுறையின் மூலம் அரசாங்கத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு வியாபாரத்தை நடத்துவது போன்ற நிதி ஒழுக்கம் இங்கு இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு அரச நிறுவனத்திலிருந்தும் உச்ச பலன்களைப் பெற வேண்டும்.

தற்போது அமைச்சுகளின் தேவையற்ற செலவுகளைக் குறைக்க நாம் திட்டமிட்டுள்ளோம். மேலும், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலம், கட்டடங்கள், வாகனங்கள் தொடர்பான அறிக்கை தயாரிக்கும் பணிகள், பிரதமரின் செயலாளர் தலைமையில் நடைபெறுகின்றது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அந்தத் தகவல்களைப் பெற முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery