ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை சீ.ஐ.டியிடம் ஒப்படைத்தமை வெறும் கண்துடைப்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒப்படைத்தது வெறும் கண்துடைப்பு நாடகம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கவிந்த ஜயவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதனால் எந்த பயனும் ஏற்படக்கூடிய சாத்தியம் கடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை பொது ஆவணமாகவே இருக்கிறது. இது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலேயே சட்ட மா அதிபரிடம் (Attorney General) ஒப்படைக்கப்பட்டது எனவும் எனினும் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த அறிக்கையை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையிடம் ஒப்படைத்தார்.இப்போது அந்த அறிக்கை பாராளுமன்ற நூலகத்திலும் இருக்கிறது. அப்படியிருக்க, மீண்டும் இதை சிஐடிக்கு கொடுப்பதால் என்ன பலன்?" என காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இதை செய்தது வெறும் கண்துடைப்பு நாடகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிள்ளையான்னின் கைது தொடர்பாக அரசாங்கத்தினர் முரண்பாடான கருத்துகளை வெளியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிள்ளையானின் கைது தொடர்பில் ஒரு அமைச்சர் ஈஸ்டர் தாக்குதலின் காரணமாக கைதானார் எனவும் மற்றுமொரு அமைச்சர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவரின் கடத்தல் தொடர்பில் கைதானதாக தெரிவித்துள்ளார் எனவும் இவ்வாறு முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நலன் மற்றும் அவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் வகையில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வத்திக்கானுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் தாம் வத்திக்கானுக்கு செல்ல உள்ளதாகவும் அங்குள்ள உயர் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளதாகவும் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.