மைத்திரியின் கருத்தால் பெரும் சர்ச்சை: பொலிஸ்மா அதிபருக்கு டிரான் அவசர பணிப்பு

Easter Maithripala Sirisena Tiran Alles Easter Attack Sri Lanka
By Madheeha_Naz Mar 24, 2024 12:23 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விடுத்துள்ள அவசர செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் தான் அறிந்துள்ளேன் என்று மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ராசபக்ச குடும்பத்தினர்

அத்துடன், நீதிமன்றத்தால் கோரிக்கை விடுக்கப்படுமாயின் அல்லது உத்தரவிடப்படுமாயின் அது தொடர்பான விபரங்களை வெளிப்படுத்துவதற்குத் தான் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

மைத்திரியின் கருத்தால் பெரும் சர்ச்சை: பொலிஸ்மா அதிபருக்கு டிரான் அவசர பணிப்பு | Easter Attack Masterminds Probed

ராசபக்ச குடும்பத்தினரே நாட்டைப் பாரிய பிரச்சினைக்கு இட்டுச் சென்றது என்று சுட்டிக்காட்டிய மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் அனைவரும் அறிந்துள்ளனர் என்றும் கூறியிருந்தார்.

தனது ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட தரப்பினருக்கு எதிராகவே தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி நேற்று (22) கண்டியில் நடைபெற்ற மத நிகழ்வின்போது தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் சூத்திரதாரிகள் தொடர்பில் தான் தகவலை வெளியிடும்போது அதனை மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டியது நீதிபதிகளின் பொறுப்பாகும் என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தார்.