நாட்டில் அதிகரித்துள்ள டொலர் வருமானம்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டிற்கு வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலமாக கிடைக்கு டொலர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் 541 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலமாக நாட்டிற்கு கிடைத்துள்ளதாக மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சமூகவலைத்தளமான X இல் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் கடந்த ஆண்டை விட 78% அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்
மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மொத்தப் பணம் 3363.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஜூன் மாதத்தில் மொத்தமாக 476 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மே 2023 இல் 480 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஏப்ரல் மாதத்தில் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களும் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கை வெளிநாட்டு ஊழியர்களின் பணம் ஜனவரியில் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், பெப்ரவரியில் 407.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், மார்ச் 2023 இல் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.