சம்மாந்துரையில் மீண்டும் நாய்களுக்கு தடுப்பூசி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் 56 நாய்களுக்கு ARV (Anti Rabies vaccine) இன்றும்(19) தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
விசர் நாய்க்கடி தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஸஹீலா இஸ்ஸதீன் ஆலோசனையின் பிரகாரம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.நௌசாத் வழிகாட்டலில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சேவை
அத்தோடு, இலவச சேவை நடைமுறைப்படுத்தப்படுவதுடன் வீரமுனைப் பகுதியில் 60 நாய்களுக்கும் ARV தடுப்பூசி வழங்கப்பட்டது. இதில் 38 வளர்ப்பு நாய்களாகும். தடுப்பூசி வழங்குனர் முகமட் பஸ்லீன் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேலும், இதன்போது உங்களது நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமாயின், உங்களது பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகரினூடாக இலவச சேவையைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் கடந்த மார்ச் புதன்கிழமை(12) பதிவாகி இருந்தது.
இதற்கமைய 7 பேருக்கு கடித்த நாயின் மாதிரி அறிக்கை Rabies positive என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


