கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு! சிரமத்தில் மக்கள்
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம் தொடக்கம் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலைக்கு வருகைதந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கச்சார்பற்ற விசாரணை
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை பதவி நீக்கம் செய்து பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்குமாறு கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் இன்றைய தினம் பணிகஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆரம்ப வைத்திய சேவை பிரிவு மற்றும் கிளினிக் சேவைகளில் வைத்தியர்கள் வருகைதராத காரணத்தினால் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகைதந்த மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் தமது கோரிக்கைக்கான சாதகமான தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினர் தெரிவித்துள்ளனர்.