இலங்கையில் விவாகரத்து எளிதாக்கப்படும் - நீதியமைச்சர்

By Mayuri Dec 11, 2023 08:01 AM GMT
Mayuri

Mayuri

விவாகரத்து பெறுவதை இலகுவாக்கும் மூன்று புதிய சட்டமூலங்கள் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதன்படி, திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தற்போது விவாகரத்து பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் காலாவதியான சட்டங்கள் தீவிரமாக சீர்திருத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது விவாகரத்து கோரும் நபர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்பு , தீங்கிழைக்கும் விலகல் அல்லது ஆண்மை குறைவு ஆகிய மூன்று உண்மைகளில் ஒன்றை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும்.

அந்த உண்மைகளை நிரூபிக்கும் பொறுப்பு விவாகரத்து கோருபவர் மீது உள்ளது என்றும், இதுபோன்ற காரணங்களை நிரூபிப்பது மிகவும் கடினம் என்றும் சில விவாகரத்து வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரை இழுபறியாக உள்ளதாகவும், விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதில் இந்த உண்மைகள் பரிசீலிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.