கிளிநொச்சியில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(26.10.2023) இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் போருக்கு பிந்திய நிலையில் மக்களின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணிகள் அவசியமாக தேவைப்படும் போது காணிகளை விடுவித்து மக்கள் பாவனைக்காக கையளிப்பது தொடர்பிலும் துறைசார் திணைக்கள அதிகாரிகள், பொதுமக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு சிரமங்கள் நெருக்கடிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
வன ஒதுக்கீடு
மேலும் வனபரிபாலன உத்தியோகத்தர்களின் இறுக்கமான நடைமுறையால் அதிகாரிகள் மீதும் அரசின் காணிகளை விடுவிக்கும் திட்டத்தின் வழிமுறைகள் மீதும் சந்தேகங்கள் அதிருப்தியில் வெளிப்படுத்துவதாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.
நாடு தழுவிய வன பகுதிக்கான ஒதுக்கீடு 32 விதமாக இருக்கும் போது அதை விட கூடுதலாக கிளிநொச்சி மாவட்டத்துக்கான வன ஒதுக்கீடு ஏன் இருக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் வினா எழுப்பினர்.
போர்ச்சூழலின் போது குடியிருப்புக்கும் பயிர்செய்கைக்குமாக மக்கள் பயன்படுத்திய காணிகளில் மக்கள் குடியமர்வதற்கு வர்த்தமானி அறிவித்தலுக்கு அவசியமென்ன என்ற கேள்விகளும் கூட்டத்தில் எழுந்தன.
பாரிய இடப்பெயர்வுக்கு பின்னர் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்ந்த தமது உற்பத்தி முயற்சிகளை தொடர்ந்த நிலையில் இவ்விடங்கள் வனபரிபாலன அதிகாரிகளால் எல்லை படுத்தப்பட்டுள்ளன.
வனபரிபாலன திணைக்களம்
வட்டக்கச்சியில் 1960களில் செயல்பாட்டில் இருந்த பாற்பண்ணை பிரதேசங்கள், பூநகரியின் பல இடங்களில் மக்கள் வாழ்ந்த பகுதிகள் குடியிருப்புக்கு மறுக்கப்பட்டிருக்கிறது, மற்றும் மலையாளபுரம் மக்கள் வாழ்ந்த பகுதிகள் வனபரிபாலன திணைக்களத்தின் எல்லைப்படுத்தப்பட்டிருப்பதும் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனைவிழுந்தான் 600 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் 70களில் இருந்து நீர் பாசனத்திற்கான உட்கட்டுமானங்கள் நிர்மாணிக்கப்பட்டு உற்பத்தி முயற்சிகள் போர்ச்சூழலில் நடைபெற்ற நிலையில் அந்த இடங்கள் இன்னும் ஏன் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட வில்லை என்ற கேள்விகளும் வனபரிபாலன அதிகாரிகளை நோக்கி முன்வைக்கப்பட்டன.
அவ்வாறே கிளிநொச்சி மாவட்டம் சிறந்த விவசாய செய்கைக்கான மாவட்டமாக வெளிப்பட்டிருக்கும் நிலையில் கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் தரவை விடுவிப்பதில் வர்த்தமானி அறிவித்தலை காரணம் காட்ட முயற்சிப்பது மீதும் கேள்விகள் எழுந்தன.
வனவளத் திணைக்களத்தின் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களிடம் ஊடகவியளார்கள் வினா எழுப்பப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் ,அங்கஜன் இராமநாதன், மற்றும் வனவள திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டு காணிகளை விடுவிக்கும் முயற்சிகளின் சமகால நிலையை ஆராய்ந்தனர்.
அத்துடன் அதிகாரிகள் தரப்பிலிருந்து ஜனாதிபதியின் வட மாகாணத்திற்கான செயலாளர் இளங்கோவன் காணி, வனபரிபாலன திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.