காதர் மஸ்தான் தலைமையில் விவசாய ரீதியிலான மீளாய்வு கலந்துரையாடல்
விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற விவசாய ரீதியிலான முன்னேற்ற செயற்பாடுகளை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் ஒன்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் வட மாகாணம்,கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகியவற்றின் விவசாய முன்னேற்ற செயற்பாடுகளை நிர்வாகித்து மேற்பார்வை செய்யும் பொறுப்பு கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையடுத்து வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மீள் ஆய்வுக் கூட்டமாக குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் திணைக்களங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் அதனை தீர்ப்பதற்கான சாதகமான தீர்மானங்கள், உள்ளூர் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான முனைப்பான அம்சங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன அத்துடன் குறைந்த மூலதனத்துடன் கூடிய விவசாயி உற்பத்திகளை பெற்றுக்கொள்ளக்கூடிய தானியங்களை இனம் கண்டுகொள்வது சம்பந்தமாகவும் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சின் மேலதிகச் செயலாளர், வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மாகாண மற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர்கள், மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி ஆணையாளர்கள், விவசாய அமைச்சுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. கலந்துரையாடலின் நிறைவில் இன்றைய கூட்டம் தொடர்பில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது குறித்த கல்ந்துரையாடல் தொடர்பில் தெரிவி்ப்பட்டது.