ஆயிரக்கணக்கான பாவனையாளர்களின் நீர் விநியோகம் துண்டிப்பு
நாட்டின் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், நீர் கட்டணம் செலுத்தாத ஆயிரக்கணக்கான மக்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 90,000 பேருக்கு நீர் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
இவ்வருடம் (2023) மே மாத நிலவரப்படி சுமார் 8 பில்லியன் ரூபாய் நீர் கட்டணங்கள் நிலுவையில் உள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
மேலும், மொத்த நீர் கட்டண தொகையில் 7.1 பில்லியன் ரூபாய் நிலுவை வீட்டு நீர் விநியோக பாவனையாவார்களால் செலுத்தப்படாமல் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத வழிபாட்டுத் தலங்களில் 32 மில்லியன் ரூபாவும், பொது நீர் விநியோகத்தில் 262 மில்லியன் ரூபாவும், தொழிற்சாலைகளில் 15 மில்லியன் ரூபாவும் மற்றும் அரச நிறுவனங்களில் 656 மில்லியன் ரூபாவும் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நிதி நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் வகையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 90,617 பாவனையாவார்களின் நீர் விநியோகத்தைத் துண்டித்துள்ளதுடன், 5,277 நுகர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.