டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேக நபர் தப்பியோட்டம்!
கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலை குற்றவாளி இன்று காலை 05.00 மணிக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வயோதிப தம்பதியினர் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸார் கோரிக்கை
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பொகவந்தலாவை பெற்றோசோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (23) பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், எதிர்வரும் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், விளக்கமறியலில் இருந்த சந்தேகநபருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் இன்று அதிகாலை 5 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.